search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிகார தலங்கள்"

    • அம்பிகைக்கு அபிஷேகம் செய்து தரிசித்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
    • சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கும்.

    முற்பிறவியில் செய்த பாவத்தால் இப்பிறவியில் தீராத துன்பங்களை அனுபவித்து அவதிப்படுபவர்கள், சிவாலயங்களுக்கு சென்று முறையாக வழிபட்டால் தங்கள் முற்பிறவி பாவங்களில் இருந்து விடுபடலாம் என்பது முன்னோர் கூற்று.

    முற்பிறவி பாவங்களை போக்கும் சிவாலயங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தாலும் இதில் முக்கிய இடத்தை பிடிக்கும் சிவாலயமாக நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது.

    குறிப்பாக மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வை அடைந்து அனைத்து பேறுகளையும் பெற சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரை தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது வழிபட வேண்டும்

    மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ஒரு அற்புத ஆலயம்தான், நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள சீயாத்தமங்கை சிவாலயம் ஆகும். மேற்கு நோக்கி உள்ள சிவலாயத்தை வணங்கினால், 100 சிவாலயத்தை வணங்கியதற்கு சமம் என்பர்.

    சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சிவனுக்கும், அன்னைக்கும் தனித்தனி சன்னதி உள்ளது.

    சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில் இறைவனின் திருமேனியில் சிலந்தி ஊர்ந்ததும் மூல நட்சத்திர நாளில்தான். எனவே மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கி நலம்பெற வேண்டிய திருத்தலம் இந்த கோவில் ஆகும்.

    ஆவணி மாத மூல நட்சத்திர நாளில் இங்கு நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை தரிசித்து அந்த நாளில் நடைபெறும் ருத்ர வியாமளா தந்திர பூஜையில் பங்கேற்றால் திருமணத்தடை நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பவுர்ணமியில் இந்த கோவிலில் உள்ள சூரிய-சந்திர தீர்த்தத்தில் நீராடி அம்பிகைக்கு அபிஷேகம் செய்து தரிசித்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    குழந்தை பாக்கியம், கல்வி, திருமணம் வேண்டுவோர் 5 பவுர்ணமிகளில் சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கும்.

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து அங்கிருந்து நாகை- கும்பகோணம் சாலையில் உள்ள திருமருகலுக்கு சென்று திருமருகலில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள இக்கோவிலை அடையலாம்.

    தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்களும் நாகப்பட்டினத்துக்கு வந்த மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம். நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 13 கி.மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது.

    • சேலம் - திருச்செங்கோடு சாலையில் காளிப்பட்டி முருகன் கோவில் உள்ளது.
    • கந்தசாமியைப் பிரார்த்திக்க கல்யாண வரமும் பிள்ளை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் புகழ் பெற்றது. இந்த ஆலயத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் சேலம் - திருச்செங்கோடு சாலையில் காளிப்பட்டி முருகன் கோவில் உள்ளது. முன்னொரு காலத்தில், இங்கு முருக பக்தர் ஒருவர் வசித்தார். ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளையொட்டி, கடும் விரதம் இருந்து, பாத யாத்திரையாக பழனிக்கு காவடி எடுத்துச் சென்று வழிபடுவது இவரது வழக்கம்.

    ஒரு நாள் அவரின் கனவில் தோன்றிய முருகக் கடவுள், "இனி, என்னைத் தேடி பழனி வர வேண்டாம். உனது இடத்திலேயே குடியிருக்க விரும்புகிறேன். இங்கேயே கோவில் எழுப்பு!"என்று அருளி மறைந்தாராம், அதன்படி கட்டப்பட்டதே, காளிப்பட்டி கந்தசாமி திருக்கோயில்.இந்தப் பகுதியில் எவரேனும் பாம்பு கடித்து மயங்கி விட்டால், உடனடியாக அவரை இந்தக் கோயில் மண்டபத்துக்கு கொண்டு வந்து கிடத்துகின்றனர்.

    பூசாரி, முருகக் கடவுளின் அபிஷேகத் தீர்த்தத்தையும் விபூதியையும் தர, சிறிது நேரத்தில் விஷம் இறங்கி விடுமாம். இந்த கோவிலில் பாலாபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம். வைகாசி விசாகம் போன்ற நாட்களில், பாலாபிஷேகம் செய்து கந்தசாமியைப் பிரார்த்திக்க கல்யாண வரமும் பிள்ளை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    குடும்பத்தில் பிரச்சினை, வியாபாரத்தில் நஷ்டம், வீண் பயம் முதலனவற்றால் அவதிப்படுபவர்கள், இங்கு வந்து கந்தசாமியை மனமுருகிப் பிரார்த்தித்து, இடும்பன் சந்நிதியில் தரப்படும் "மை" பிரசாதத்தைப் பெற்று மூன்று நாட்கள் தினமும் நெற்றியில் வைத்துக் கொண்டால், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும், தேவையற்ற பயம் விலகும்.

    வைகாசி விசாக நாளில், உற்சவர் வீதியுலா நடைபெறும் போது காளிப்பட்டி கந்த சாமியை வணங்கினால் கவலையெல்லாம் பறந்தோடி விடும் என்பது ஐதீகம்.

    • சுக்கிர தோஷ நிவர்த்திக்காக இங்கு சென்று வழிபடலாம்.
    • முருகன் கல்யாண வரம் தரும் கந்தனாக இந்தக் கோவிலில் குடிகொண்டுள்ளார்.

    திருவாரூர் -கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டையில் ஸ்ரீஅபினாம்பிகை உடனுறை ஸ்ரீஅபிமுக்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் திருமண வரம் தரும் கடவுளாக ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி உள்ளார்.

    18 படிகள் ஏறிச் சென்று மூலவரை தரிசிக்கும் அமைப்புடன் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. மூலவர் ஸ்ரீஅபிமுக்தீஸ்வரரை ஆயிரம் முல்லைப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தீராத நோயும் தீரும். சுக்கிரன், இந்தத் தலத்தின் சரவணப் பொய்கையில் நீராடி, தவம் இருந்து, இழந்த சக்தியைச் திரும்பப் பெற்றார். எனவே, சுக்கிர தோஷ நிவர்த்திக்காக இங்கு சென்று வழிபடலாம்.

    ஸ்ரீசுப்பிரமணியர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்குப்பொன்னும் பொருளும் அருள்வதுடன், திருமண வரமும் வழங்குகிறார். வள்ளியைக் கரம்பிடிக்க விரும்பிய முருகன், இந்தத் தலத்துக்கு வந்து பரமசிவனையும் பார்வதியையும் வேண்டி தவம் செய்து வழிபட்டதாகச் சொல்கிறது தல புராணம். பிறகு, சிவ-பார்வதியின் ஆசியோடும், அண்ணன் விநாயகரின் துணையோடும் வள்ளிமலையில் ஸ்ரீவள்ளியை மணம் செய்து கொண்டார்.

    தனது திருமணம் நிறைவேற பெற்றோரின் ஆசி கிடைத்த இந்தத் தலத்தில், பக்தர்களின் திருமண பிரார்த்தனைகளையும் நிறைவேற்ற முருகன் சித்தம் கொண்டு கல்யாண வரம் தரும் கந்தனாக இந்தக் கோவிலில் குடிகொண்டுள்ளார்.

    வேலவன் வழிபட்டதால், இந்த ஊருக்கு வேளூர் என்றும் பெயர் உண்டு. இந்த தலத்தில் உள்ள சரவண பொய்கையில் நீராடி, முருகனை வழிபட்டால், திருமண தோஷங்கள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வம் பெருகும்.

    • குரு பரிகார தலங்கள் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் உள்ளன.
    • திருமணத்தில் தடை ஏற்படுபவர்கள் குரு பகவானை வழிபாடு செய்ய வேண்டும்.

    ஆன்மிக பூமியான தமிழகத்தில் ஆயிரக் கணக்கான ஆலயங்கள் நிறைந்துள்ளன. நவக்கிரக கோவில்களும் நட்சத்திர கோவில்களும் இங்குதான் உள்ளன. குரு பரிகார தலங்கள் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் உள்ளன. அவற்றில் முக்கியமான ஆலயங்கள் பற்றி பார்ப்போம்.

    தென்குடி திட்டை

    திட்டை திருத்தலம், தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வசிஷ் டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்ப தாகும்.

    இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குரு பகவான் ராஜ குருவாக வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்திலும் காண முடியாத தனிச் சிறப்பாகும்.

    பாடி திருவலிதாயம்

    சென்னைக்கு அருகில் உள்ள பாடி திருவலிதாயத்தில் அமைந்துள்ள வலிதாய நாதர் கோவில், குரு பகவான் வழிபட்ட தலமாகும். வியாழ பகவான், தான் செய்த ஒரு தவறால், தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார்.

    இதற்கு விமோசனம் கிடைக்க மார்க்கண்டேய மகரிஷியின் உதவியை நாடினார். அவரது ஆலோசனை படி, இத்தலத்து சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்தருளினார். குருவுக்கு இங்கு சன்னிதி உள்ளது. இவர் சிவனை வணங்கும் வகையில் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பான அமைப்பு.

    திருச்செந்தூர்

    குரு பகவானுக் குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது, முருகனுக் குரிய ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ஆகும். தேவர்களைக் காக்க முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க இங்கு வந்தார். அப்போது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களைப் பற்றியும், அவர்களது குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால், இத்தலம் குரு தலமாகக் கருதப்படுகிறது.

    இங்குள்ள மேதா தட்சிணா மூர்த்தியும் விசேஷமானவர். இவர், கூர்மம் (ஆமை), அஷ்ட நாகம், அஷ்ட யானைகளுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார். வலதுகையில் சிவபெருமானுக் குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒரு முறையாவது சென்று வரவேண்டிய தலம் இது.

    குருவித்துறை

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில், ஒரே சன்னிதியில் குரு பகவானும், சக்கரத் தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். அசுர குருவான சுக்ராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் 'மிருத சஞ்சீவினி' மந்திரம் கற்றிருந்தார். இதனால், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் நடக்கும்போது, அவர் எளிதாக அசுரர்களை உயிர்ப்பித்தார். அந்த மந்திரத்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையிலிருந்து ஒருவரை சுக்ராச்சாரியாரிடம் அனுப்ப முடிவு செய்தனர்.

    தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன், அந்த மந்திரத்தை கற்று வருவ தாகச் சொன்னான். அதன்படி சுக்ராச் சாரியாரிடம் சென்றவன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். அவரிடம் மந்திரத்தைக் கற்று வந்தான். கசன், தேவகுலத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிந்த அசுரர்கள், அவனை எரித்து சாம்பலாக்கி, சுக்ராச் சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர்.

    கசனைக் காணாத தேவயானி, தந்தையிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்ராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். மகனைக் காணாத குரு பகவான், அவனை அசுரலோகத்தில் இருந் து மீட்டு வர அருளும்படி, இங்கு பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி, சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார்.

    பட்டமங்கலம்

    கிழக்கு நோக்கிய அனுக்கிரக தட்சிணாமூர்த்தி, சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் அருளுகிறார். இவரது சன்னிதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆல மரம் உள்ளது. பக்தர்கள் இம்மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் சன்னிதி அமைந்துள்ளது. சன்னிதி முன் மண்டபத்தில் ராசிக்கட்டம் உள்ளது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி பிரதானம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள். வியாழக் கிழமை குரு ஓரை நேரத்தில் (மதியம் 1 - 2 மணி) இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். மதுரையில் இருந்து 65 கி.மீ., திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக 90 கி.மீ., தூரத்தில் திருப்புத்தூர் இருக்கிறது. இங்கிருந்து 8 கி.மீ., தூரத்தில் பட்டமங்கலம் அமைந்துள்ளது.

    அகரம் கோவிந்தவாடி

    காஞ்சீபுரம் - அரக்கோணம் பேருந்து வழியில், கம்மவார்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோவிலுக்குச் செல்லலாம். இத்தலத்திலும் தட்சிணாமூர்த்தியே குருவாக அருளாட்சி புரிகிறார். இது சிறந்த குரு பரிகாரத் தலம். இவர், வியாக்யான தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

    தக்கோலம்

    வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. இத்தலத்து இறைவன் வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம்..

    • சுருட்டப்பள்ளியில் உள்ளது பள்ளிகொண்டேஸ்வரர் ஆலயம்.
    • தட்சிணாமூர்த்தி, அம்பிகையை அணைத்தவாறு, வேறு எங்கும் காண முடியாத கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    தட்சிணாமூர்த்திக்கான சிறப்புமிக்க ஆலயங்களில், ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளி என்ற இடத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலும் ஒன்று. இந்த ஆலயத்தை 'பள்ளிகொண்டேஸ்வரர் ஆலயம்' என்றும் அழைப்பார்கள்.

    இங்கு ஆலகால விஷத்தை உண்ட ஈசன், விஷத்தின் வீரியத்தால் ஏற்பட்ட மயக்கம் காரணமாக அம்பாளின் மடியில் தலை வைத்தவாறு காட்சியளிக்கிறார். இந்த ஆலயத்தில் குருவின் அம்சமாக வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி, அம்பிகையை அணைத்தவாறு, வேறு எங்கும் காண முடியாத கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    இவரை, 'போக தட்சிணாமூர்த்தி' என்றும், 'தாம்பத்ய தட்சிணாமூர்த்தி' என்றும் சொல்கிறார்கள். வலது காலைத் தொங்கவிட்டு, இடது காலை குத்திட்ட நிலையில் வைத்து, கரங்களில் மான், மழு தாங்கிய நிலையில் உள்ள இவரது கோலம் எழில் மிக்கது. போக நிலையில் 'சக்தி தட்சிணாமூர்த்தி'யாக விளங்கும் இவரிடம் திருமண வரம் கேட்டு, சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    குருவருளைப்பெற்று திருமண வேண்டுதல்கள் நிறைவேற சுருட்டப்பள்ளி போக தட்சிணாமூர்த்தியை வணங்கலாம்.

    • இவரின் விஷேசம் 27 நட்சத்திரமும், 12 இராசியும் இவர் திருமேனியில் அடக்கம்.
    • மேஷ ராசிகாரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.

    இந்தியாவில் 2 கால பைரவர் கோவில்கள் உள்ளன. முதல் கோவில் காசியில் உள்ள தட்சிண காசி (தென்காசி காலபைரவர்) என்றழைக்கப்படும் கோவில். அதற்கு அடுத்தது தருமபுரி கால பைரவர் கோவில். தருமபுரியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அதியமான்கோட்டையில் இக்கோவில் அமைந்துள்ளது. தருமபுரியில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வசதி உள்ளது. பேருந்தில் இருந்து இறங்கிய உடன் அருகிலேயே கோவில் உள்ளது.

    இந்த கோவிலை கட்டிய பிறகு அதியமான் மன்னர் போர்களில் வென்றார் என்கிறது வரலாறு. இக்கோவில் கட்டப்பட்டு 1200 வருடங்களாகின்றன.

    இவர் கோவிலில் 9 நவகிரக சக்கரத்தை புதுபித்து மேல் கூரையில் ஸ்தாபித்துள்ளார். அதன் வழியாக வந்தால் நவகிரக தோஷங்கள் விலகும். ஜாதக தோஷங்கள் விலகும். அன்று முதல் அதியமான் மன்னருக்கும், நாட்டு மக்களுக்கும் தட்சணகாசி காலபைரவர் குலதெய்வமாக விளங்கினார். அன்று முதல் கோட்டையின் சாவி காலபைரவரின் கையில்தான் இருக்கும். இக்கோவிலில் உன்மந்திர பைரவர் உள்ளார் (முதன்மை பைரவர்). இவரின் விஷேசம் 27 நட்சத்திரமும், 12 இராசியும், இவர் திருமேனியில் அடக்கம்.

    மேஷராசிகாரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும், ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும். இக்கோவிலில் அதியமான் மன்னர் இருவேளையும் வழிபடுவார்.

    இவர் போருக்கு செல்லும் முன் வாள் வைத்து பூஜை செய்து வழிபட்ட பின்புதான் போருக்கு செல்வார். இதன் அடையாளமாக இக்கோவிலில் மட்டும் வாள் இருக்கும். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமாயின், இக்கோவிலின் வழிமுறையானது. சாம்பபூசனை விளக்கினை காலபைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். இந்த வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.

    • 17-வது திவ்ய தேசமாக திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது.
    • புரட்டாசி மாத சனிக்கிழமையன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் பிரசித்தி பெற்ற சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 வைணவ திவ்யதேசங்களில், 17-வது திவ்ய தேசமாக திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது.

    பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதம் மிகவும் விசேஷமான மாதமாகும். சனிக்கிழமைகளில் பக்தர்கள் பொதுவாக பெருமாளுக்கு விரதம் இருப்பது வழக்கம். புரட்டாசி மாத சனிக்கிழமையில் ஒரு விசேஷம் உள்ளது. இந்த நாளில் தான் சனிபகவான் அவதரித்தார். எனவே சனிபகவானின் கெடுபலன்கள் குறைய பெருமாளை பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    திருக்கண்ணப்புரத்து சவுரிராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். அன்று முழுவதும் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறும். குறிப்பாக திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் விரைவில் திருமணத்தடை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    இந்த கோவிலில் தினமும் காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு நடை மூடப்படும். மீண்டும் மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை மூடப்படும்.

    திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் மேல் பெருமாளின் பார்வை படுவதால் இந்த கோவிலில் வழிபடுவோரின் சகல கிரக தோஷங்களும் நீ்ங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    கோவிலுக்கு செல்வது எப்படி

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருக்கண்ணபுரம் பகுதியில் அமைந்து உள்ள இந்த கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தா்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து அங்கிருந்து நாகூரை அடைந்து நாகூரில் இருந்து திட்டச்சேரி, திருமருகல் வழியாக 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள திருக்கண்ணபுரம் செல்லலாம்.

    தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் ரெயிலில் ஏறி நாகப்பட்டினத்துக்கு சென்று அங்கிருந்து மேற்கூறிய வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    • தாமரை மலர்களால் அவரை அர்ச்சித்து வழிபட வாழ்வில் வசந்தம் பொங்கும்.
    • குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள், மற்றும் எமபயத்திலிருந்தும் நிவர்த்தி அளிப்பார்.

    கடன்கள் மற்றும் நோய் தீர்க்கும் கடவுள் என்று போற்றப்படுபவர் 'ரிண-ருண விமோச்சனர்' ஆவார். இவர் அருள் புரியும் கோயில் திருவாரூர் மற்றும் மன்னார்குடியில் உள்ளது. மன்னார்குடியில் திருபாற்கடல் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காசிவிசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயம் சுமார் எண்ணூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது சிவாலயங்களில் உள்ள அனைத்து அம்சங்களும் நிறைந்த இக்கோயிலில் மிகவும் போற்றப்படுபவர். தனிச்சந்நதியில் அருள்புரியும் 'ரிண- ருண விமோச்சனர்' ஆவார்.

    இங்கு அருள்பாலிக்கும் காசி விஸ்வநாதருக்கு திங்கட்கிழமையில் அபிஷேகம் முடிந்ததும் தாமரை மலர்களால் அவரை அர்ச்சித்து வழிபட வாழ்வில் வசந்தம் பொங்கும். காசி விசாலாட்சிக்கு வெள்ளிக்கிழமையிலும். வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு செவ்வாய்க்கிழமையிலும், ராகு காலத்தில் துர்க்கைக்கும், தேய்ப்பிறை அஷ்டமியில் பைரவருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன 'ரிண-ருண விமோச்சனர்' தெற்கு திசை நோக்கி தனி சந்நதியில் பெரிய சிவலிங்கத் திருமேனியில் அருள் புரிகிறார்.

    இக்கோயிலில் மேற்கு கோபுரவாசல் அருகேயுள்ள கமலாயத் திருக்குளத்தில் நீராடி, அங்கு அருள் புரியும் 'படிக்காசு விநாயகரை வழிபட்ட பின் தியாகராஜப் பெருமானையும். அன்னை கமலாம்பிகையையும், நீலோத்யல அம்பாளையும், புற்றீஸ்வர(வான்மீக) பெருமானையும் வழிபட்டபின் 'ரிண-ருண விமோச்சனப் பெருமானை தரிசிக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது.

    அபிஷேக, ஆராதனைகள் முடிந்ததும் பதினோருமுறை வலம் வந்து இந்த ஈஸ்வரரின் இடது புறத்தில் தனிச் சந்நதியில் சன்டேஸ்வரராக அமர்ந்திருக்கும் எமனையும் வழிபட்டால் நோய் நொடிகளிலிருந்தும், கடன் பிரச்சனைகள், வழக்குகள். குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள், மற்றும் எமபயத்திலிருந்தும் நிவர்த்தி அளிப்பார்.

    அமாவாசை, ஞாயிறு, திங்கள், வெள்ளிக்கிழமைகளில் பால் அபிஷேகம் செய்து மிளகு கலந்த உப்பினை இவரது திருவடியில் சமர்ப்பிப்துடன் வில்வபத்ரம், ரோஜா, நாகலிங்க புஷ்பம், வெண்தாமரை, செந்தாமரை, மல்லிகை ஆகிய மலர்களால் வழிபட்டாலும் தீராதநோய்கள். கடன்கள் தீரும் என்பதும் நம்பிக்கை.

    • இத்தல முருகனை பிரார்த்தனை செய்துகொண்டால் விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும்.
    • வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுகின்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரில் உள்ளது, பழமையான வள்ளி - தெய்வானை உடனாய சுப்பிரமணிய சுவாமி ஆலயம். சூரபத்மனால் அமைக்கப்பட்ட கந்தபுஷ்கரணியை தல தீர்த்தமாக கொண்டது, சூரபத்மன் மயிலாக வந்து முருகனை வழிபட்டு ஞானோபதேசம் பெற்ற தலம், ஆறுமுகங்களுடன் அருளும் இறைவனை வழிபடுவதால் ஆறுபடை வீடுகளையும் வழிபட்ட பலனை தரும் ஆலயம், அகத்தியர் வழிபட்ட தலங்களில் ஒன்று, பிரம்பு என்னும் முள்செடியை தல விருட்சமாகக் கொண்ட ஆலயம், ராஜராஜசோழன் பிரதிஷ்டை செய்த இடஞ்சுழி விநாயர் சன்னிதி அமைந்த ஆலயம் என பல்வேறு சிறப்புகளுடன் விளங்குகிறது, இந்த சுப்பிரமணியர் கோவில்.

    இவ்வாலய முருகப்பெருமானை, தொடர்ந்து 6 வாரங்கள் 6 அகல்விளக்கு தீபம் ஏற்றி, செவ்வரளிப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை அகலும். முருகப்பெருமானுக்கு சண்முக அர்ச்சனை செய்தால், பிறப்பற்ற நிலை உண்டாகும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல முருகனை பிரார்த்தனை செய்துகொண்டால் விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும். இழந்தப் பதவியைப் பெற விரும்புபவர்கள், புதிய பதவி கிடைக்க வேண்டுவோரும், நம்பிக்கையுடன் இத்தல முருகப்பெருமானை வணங்கி வரலாம். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், முருகனுக்கு காவடி எடுத்தும், பால் அபிஷேகம் செய்தும், சந்தனத்தால் அலங்காரம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுகின்றனர்.

    இந்தக் கோவிலில் சிவபெருமான், குபேர திசையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவரை திங்கட்கிழமை, பிரதோஷம், சிவராத்திரி போன்ற நாட்களில் வில்வம் சமர்ப்பித்து வழிபட்டால், கடன் நிவர்த்தி மற்றும் தொழில் அபிவிருத்தி ஏற்படும். இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகுந்த சக்தி படைத்தவள். சாந்த துர்க்கையாக இருக்கும் அந்த தேவியை செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும், துர்க்காஷ்டமியின் போதும் தீபமேற்றி வழிபடுவோருக்கு, வேண்டும் வரம் அருள்வாள். ஆண்டுதோறும் தை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று 501 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அதில் பங்கேற்றால் சகல பலன்களும் கிடைப்பதுடன், குடும்ப பிரச்சினைகள் தீர்ந்து செல்வம் கொழிக்கும்.

    காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும் இந்த ஆலயம், ஆடுதுறையில் இருந்து பொறையார் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலைகள் சந்திக்கும் மங்கநல்லூரில் இருந்து கிழக்கில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து மங்கநல்லூர், சங்கரன்பந்தல் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் பெரம்பூர் வழியே செல்கின்றது. மயிலாடுதுறை, பொறையார், காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களிலிருந்து நேரடி பேருந்து வசதியும் உள்ளது.

    -நெய்வாசல் நெடுஞ்செழியன்

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • மயிலாடுதுறை வந்து பூம்புகார் மார்க்கமாக மங்கை மடத்தை அடைந்து 5 நரசிம்மர்களையும் தரிசிக்கலாம்.
    • பஞ்ச நரசிம்மர்களையும் ஒரே நாளில் வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது பக்தா்கள் நம்பிக்கை.

    பாவங்கள் போக்கும் வைணவ திருத்தலங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தாலும் பஞ்ச நரசிம்மா்கள் அருள்பாலிக்கும் இடமாக மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் உள்ளன. உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர், வீர நரசிம்மர் மற்றும் லட்சுமி நரசிம்மர் என பஞ்ச நரசிம்மர் கோவில்களை ஒரே நாளில் தரிசனம் செய்தால் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி அனைத்து நன்மைகளையும் பெற்று நல்வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    உயிரிழந்த நம் முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடைமைகளை செய்ய தவறும்போது பித்ரு தோஷம் ஏற்படுகிறது. இதேபோல முற்பிறவியில் நாம் செய்த பாவத்தின் விளைவு மறுபிறவியில் நம்மை இன்னலுக்குள்ளாக்குகிறது. மயிலாடுதுறை மாவட்டம் மங்கைமடம் அருகே கோவில் கொண்டுள்ள பஞ்ச நரசிம்மர்களும் சர்வதோஷங்களை போக்கும் நரசிம்மர்களாக உள்ளனர்.

    தீராத நோய்களை தீர்த்து பித்ரு தோஷம், பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை ஆகியவற்றை தங்கள் பக்தர்கள் வாழ்வில் இருந்து நீக்குவதால் பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்று உள்ளனா். வேலைவாய்ப்பின்மை, திருமணத்தடை போன்றவற்றை போக்கி மழலை செல்வ பாக்கியம் பெற பஞ்ச நரசிம்மர்களையும் ஒரே நாளில் வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது பக்தா்கள் நம்பிக்கை.

    சென்னையில் உள்ள பக்தர்கள் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ள இந்த பஞ்ச நரசிம்மர் கோவில்களை(5 கோவில்கள்) தரிசிக்க பஸ் அல்லது ரெயில் மூலம் சீர்காழிக்கு வந்து அங்கிருந்து பூம்புகாா் செல்லும் பஸ்சில் ஏறி மங்கைமடம் என்ற பகுதியில் இறங்கி அருகருகே இருக்கும் 5 நரம்சிம்மர் கோவில்களையும் ஒருங்கிணைந்து தரிசிக்கலாம்.

    நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து இந்த கோவில்களை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் முதலில் மயிலாடுதுறை வந்து பூம்புகார் மார்க்கமாக மங்கை மடத்தை அடைந்து 5 நரசிம்மர்களையும் தரிசிக்கலாம்.

    • பிரம்மஹத்தி தோஷம் இருந்தால் ஒருவருக்கு திருமணத்தடை ஏற்படும்.
    • பெரும்பாலானவர்கள் சொல்வது இந்தக்கோவிலின் பரிஹார முறையைத்தான்.

    பிரம்மஹத்தி தோஷம் ஒருவருக்கு ஏன் ஏற்படுகிறது என்பது பற்றி புராணங்களில் சொல்லப்படுகிறது. பிராமணரை கொலை செய்தல், முன்பின் அறியாதவர்களுக்கு பணத்திற்காக துன்பம் விளைவித்தல், நல்ல குடும்பத்தை பொல்லாங்கு சொல்லி பிரித்தல், செய்வினை செய்தல், செய்வினை செய்பவர்களுக்கு துணை போகுதல் பிரம்மஹத்தி தோஷத்தை தரும். அதே போல திருமணத்திற்கு முன் உறவு கொண்டு பின் வேறு ஒருவரை திருமணம் செய்தல், திருமணத்திற்கு பின் வேறொரு பெண்ணை அல்லது ஆணை விரும்புதல், நம்பிக்கை துரோகம் செய்தல், ஒருவன் செய்யாத தவறை செய்தான் என சொல்லும் பொய் ஆகியவை பிரம்மஹத்தி தோஷமாகும்.

    ஒருவரின் பிறந்த ஜாதக ரீதியாக குரு சனி இணைந்து இருந்தாலோ அல்லது வேறு எந்த தொடர்பு பெற்றிருந்தாலும் பலம் பெற்றிருந்தாலும் பிரம்மஹத்தி தோஷம் இருப்பதாக சொல்லப்படுவதுண்டு. பிரம்மஹத்தி தோஷம் இருந்தால் ஒருவருக்கு திருமணத்தடை ஏற்படும். புத்தி சுவாதினம் ஏற்படுதல், நோய்களால் அவதிப்படுதல், செய்யாத குற்றத்திற்காக சிறை செல்லுதல், கணவன்-மனைவி பிரச்சினை, தொழிலில் பெரும் நஷ்டம், புத்திர பாக்கியத் தடை, புத்திர சோகம் முதலியன பிரம்மஹத்தி தோஷத்தாலேயே ஏற்படுகின்றன.

    திருவிடைமருதூர் கோவிலில் உள்ள இறைவன் சுயம்புலிங்க மூர்த்தியாக, மகாலிங்கேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார். பிரம்மஹத்தி தோஷத்திக்கு பரிகாரம் என்றால் திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜை செய்து கோவிலின் தலைவாசல் வழியாக சென்று பின்வாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு. மதுரை மன்னனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் இக்கோவிலின் வழியாக இம்முறையில் சென்றுவந்தபோது நீங்கியதாக கூறப்படுகிறது.

    பெரும்பாலானவர்கள் சொல்வது இந்தக்கோவிலின் பரிஹார முறையைத்தான். வாழ்க்கையில் தொடர்ந்து அடிக்கடி கஷ்டங்களை சந்தித்து வருபவர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று தோஷ பரிகாரங்களை செய்து கொள்வதன் மூலம் தலைமுறை சாபம் நீங்கி ஏற்றம் பெறலாம்.

    • திருச்செங்கோட்டில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது காளிப்பட்டி முருகன் கோவில்.
    • கந்தசாமியைப் பிரார்த்திக்க கல்யாண வரமும் பிள்ளை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் புகழ் பெற்றது. இந்த ஆலயத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் சேலம்-திருச்செங்கோடு சாலையில் காளிப்பட்டி முருகன் கோவில் உள்ளது.

    முன்னொரு காலத்தில், இங்கு முருக பக்தர் ஒருவர் வசித்தார். ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளையொட்டி, கடும் விரதம் இருந்து, பாத யாத்திரையாக பழனிக்கு காவடி எடுத்துச் சென்று வழிபடுவது இவரது வழக்கம். ஒரு நாள் அவரின் கனவில் தோன்றிய முருகக் கடவுள், இனி, என்னைத் தேடி பழனி வர வேண்டாம். உனது இடத்திலேயே குடியிருக்க விரும்புகிறேன். இங்கேயே கோவில் எழுப்பு! என்று அருளி மறைந்தாராம், அதன்படி கட்டப்பட்டதே, காளிப்பட்டி அருள்மிகு கந்தசாமி திருக்கோயில்.

    இந்தப் பகுதியில் எவரேனும் பாம்பு கடித்து மயங்கி விட்டால், உடனடியாக அவரை இந்தக் கோயில் மண்டபத்துக்கு கொண்டு வந்து கிடத்துகின்றனர். பூசாரி, முருகக் கடவுளின் அபிஷேகத் தீர்த்தத்தையும் விபூதியையும் தர, சிறிது நேரத்தில் விஷம் இறங்கி விடுமாம்.

    இந்த கோவிலில் பாலபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம். வைகாசி விசாகம் போன்ற நாட்களில், பாலாபிஷேகம் செய்து கந்தசாமியைப் பிரார்த்திக்க கல்யாண வரமும் பிள்ளை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    குடும்பத்தில் பிரச்சினை, வியாபாரத்தில் நஷ்டம், வீண் பயம் முதலானவற்றால் அவதிப்படுபவர்கள், இங்கு வந்து கந்தசாமியை மனமுருகிப் பிரார்த்தித்து, இடும்பன் சந்நிதியில் தரப்படும் மை பிரசாதத்தைப் பெற்று மூன்று நாட்கள் தினமும் நெற்றியில் வைத்துக் கொண்டால், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும், தேவையற்ற பயம் விலகும்.

    வைகாசி விசாக நாளில், உற்சவர் வீதியுலா நடைபெறும் போது காளிப்பட்டி கந்த சாமியை வணங்கினால் கவலையெல்லாம் பறந்தோடி விடும் என்பது ஐதீகம்.

    ×